Sunday, July 19, 2009

நான் கடவுள் தான்

நான் கடவுள் என்றான் நண்பன். நான் கடவுள் என்பதில் எனக்கும் சந்தேகமில்லை. ஆனால் எந்த கடவுள் என்பதில் தான் ஒரு தடுமாற்றம். கொழுக்கட்டை, பழங்கள், பலவித தின்பண்டங்கள் என்று எல்லா நைவேத்யதைய்யும் பின்னி பெடலேடுக்கும் பள்ளி பருவத்தில் விநாயகனா?
அரும்பு மீசையும், கலையாத தலையும், நொடிக்கொருதரம் கண்ணாடியில் சரிபார்த்து அழகை ஆராதித்து மயில் தோகைவண்ண கனவுகளில் மிதக்கும் டீன்களில் முருகனா?
காணும் அத்தனை இளம் பெண்களும் தன் அழகில் மயங்கி தன் வருகைக்காக ஏங்கி இருப்பதாக நினைத்து கற்பனை கோபியரை ராகிங் செய்து பைக்குகளின் சாரதிகளாக திரியும் காலேஜ் காலத்தில் கிருஷ்ணனா?
தனக்காக ஒருத்தி பிறந்திருபபதை கண்டெடுத்து கைப்பிடித்து காதல் கொண்டு ஏக பத்தினி விரதனாகிவிடும் போது முப்பதுகளில் ராமனா?
மாமனார் வீட்டில் மாப்பிள்ளை முறுக்குகாட்டி, பிள்ளைகள் பெண்டாட்டியின் பிடிவாதத்திற்கு ருத்ரதாண்டவம் ஆடி முணுக் என்றால் மூன்றாம் கண் திறந்துவிடும் நாற்பதுகளில் சிவபெருமானா?
கடமைகள் தொலழுத்த கவலைகள் பயமுறுத்த கடவுள் மேல் ஒரு புது நம்பிக்கை ஏற்பட்டு ஜோசியர்கள் பரிந்துரைக்கும் கோயில் களுக்கு சென்று பக்தி மார்க்கம் பார்க்கும் ஐம்பதுகளில் தம்புரா இல்லாத நாரதனா?
எல்லாம் முடிந்த பின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று அறுபதுகளில் தன்னை உதறி 'என்னை' தேடும்போது புத்தனா?
உடல் குறுகி உணர்ச்சிகள் மறந்து உடுத்தும் ஆடை கூட பாரமாகி, அது உடலில் இருக்கிறதா இல்லையா என்ற கவலையும் மறந்து இருக்கும் எழுபது எண்பதுகளில் மகாவீரனா?
நான் எந்த கடவுள் என்பதை அறியாவிட்டாலும் கடவுளும் என்னைப் போலத்தான் என்பதை அறிந்து சந்தோஷமானேன்!

1 comment:

  1. எங்கும் ஓர் பொருளானது தெய்வம் என்பது இது தானா?

    ReplyDelete